ஆணாதிக்கத்தின் முகம் எப்போதும் ஆணாய் மட்டுமே இருப்பதில்லை. ஆணாதிக்கம் அதன் தன்மையை அறிந்த பெண்களால் சிறப்பாக உள்வாங்கிப் பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் ஆணாதிக்கத்தின் நுட்பங்களை மிகத் திறமையாக கையாள்வதும், அதை மற்றவர்கள் மேல் திணிப்பதும் குடும்பத்தில் அரசியல் செய்யும் பெண்களே.
ஏன் பெண்கள் ஆணாதிக்கத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
ஆணாதிக்கத்தின் பயனாளி அந்த குடும்பத்தின் ஆண்கள் என்ற புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்த அதிக சிரமம் தேவையில்லை என்ற நோக்கத்துடன் தொடங்குகிறார்கள். தான் செய்யும் ஒவ்வொரு செயலும் குடும்பத்தின் நன்மைக்கே என்ற பரப்புரையுடன் தொடங்கப்படும் செயல்கள் பெரும்பாலும் கேள்வி கேட்கப்படுவதில்லை. தான் செய்ய நினைக்கும் பல அடக்குமுறைகளை தன் பெயர் கெடாமல் இன்னொருவர் மூலம் நடத்தும் வாய்ப்பைப் பெரும் எவரும் அதை மறுக்க வேண்டிய தேவை என்ன?
ஆணாதிக்கத்தை நடைமுறைப்படுத்தும் பெண்கள் அடையும் நன்மைகள் என்ன?
- அதிகாரம்– தான்தான் மொத்தக் குடும்பத்தின் அதிகார மையம் என்பதை பெருமையாய் எண்ணுவது. குடும்பத்தினரின் ஒவ்வொரு முடிவுகளிலும் தன் தலையீட்டை எளிதாய் புகுத்தி தன் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வைப்பது. இவையொன்றும் பல கோடி பொருள் மதிப்பீடு கொண்ட செயல்களாய் இருக்க வேண்டும் என்பது இல்லை. கணவன்,மனைவி தாங்களே எடுக்க வேண்டிய முடிவுகளிலும் ஆணாதிக்கப் பெண்களின் முடிவே இறுதியாய் இருக்க வேண்டும் என நினைத்தல். அவரவர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, அவர்களின் பொறுப்பை அதிகப்படுத்தினால் தனது அதிகாரம் பயனற்றுப் போகும் என்ற எண்ணம்.
- பணம்-குடும்பத்தின் வருமானம், சேமிப்பு, சொத்து இவற்றின் மேலானக் கட்டுப்பாடு இவர்களின் அதிகாரத்தின் முதுகெலும்பு. பணம் பற்றிய முடிவுகளை நிர்ணயிக்கும் உரிமை கையில் இருக்கும் வரை அதிகாரமையத்திலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. குடும்ப உறுப்பினர்களின் நிதி சார்ந்த விழிப்புணர்வும், தன்னிறைவும் இவர்களின் அதிகாரத்திற்கான நேரடி அச்சுறுத்தல். அதனால் அது தொடக்கத்திலேயே தடுக்கப்படும்.
ஆணாதிக்கம் எந்த வகைகளில் குடும்பத்திற்குள் நடைமுறைப் படுத்தப்படும்?
- மதம்-குறிப்பிட்ட மதக் கோட்பாடுகளில் தனக்குத் தேவையான கருத்துக்கள், மேற்கோள்கள், கட்டுப்பாடுகளை மட்டும் செயல்படுத்துவது. உதாரணத்திற்கு நூறு கோட்பாடுகளைக் கொண்ட மதத்தின் ஐம்பதாவது முதல் அறுபதாவது வரையுள்ள கோட்பாடுகளை மட்டும் அறிவுறுத்துவது. அதே மதம் கூறும் மற்ற கோட்பாடுகளை தேர்வில் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்ட கேள்வியைப்போல புறந்தள்ளுவது.
- கலாச்சாரம்-மதமும், கலாச்சாரமும் சமநிறையாய் எல்லா நிகழ்வுகளிலும் ஒத்துப்போவதில்லை. இவ்வகைப் பெண்கள் சில நேரங்களில் மதத்தையும், சில நேரங்களில் கலாச்சாரத்தையும் தன் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்க்கேற்ப தெரிவு செய்கிறார்கள்.
- வாழ்க்கைமுறை/பழக்கவழக்கம்(உணவு,உடை)-குடும்ப நடைமுறைகள், பழக்கவழக்கங்களின் வழி ஆணாதிக்கத்தை எளிமையாய் தொடரவைப்பது. இவ்வகை வழக்கங்களில் பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கு ஆண்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. குடும்ப நடைமுறைகளில் ஆண்களின் ஈடுபாடும், பங்களிப்பும் குறைவாகவே உள்ள சமுதாய அமைப்பு மற்றும் இவ்வகை நடவடிக்கைகளைப் பற்றிய அறிவுப் போதாமையும், பெண்களின் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.
- உறவினர்கள்-உறவினர்களிடம் எழுப்பப்பட்ட போலி பிம்பங்கள் குலையாமல் காப்பதற்கு செய்யப்படும் தியாகங்களாக வரிக்கப்படும் போது குடும்பத்தின் நன்மையை மறுக்கும் தைரியம் யாருக்கு வரும்?
- அந்த நாலுபேர்-குடும்பத்திலோ அல்லது குடும்ப உறுப்பினர் சார்ந்த எந்த ஒரு மாற்றமும் சமூகத்தில் அந்த நாலு பேரின் ஒப்புதலோடு நடைபெறுவதைப் போன்ற மாயத்தோற்றம் ஒன்றை நிறுவுவது. ஆனால் திரைக்கு பின்னால் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளே அந்த நாலு பேரின் கருத்துக்களாக உருவாக்கம் கொடுக்கப்பட்டு தங்களின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது. இவ்வாறு உருவாக்கப்படும் சமூக ஒப்புதல் ஒரு கவசமாக செயல்படுகிறது. மறுத்து குரல் எழுப்புபவர் தனிநபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உறவு வட்டத்தையும் எதிர்ப்பதாக தோன்றும் வகையில் சூழல் வடிவமைக்கப்படுகிறது. கேள்வி கேட்பவர் தனிமைப்படுத்தப்படுகிறார். படிப்படியாக கேள்விகேட்கும் உணர்வு மழுங்கடிக்கப்படும்.
- குற்றவுணர்வு ஏற்படுத்துதல்– குடும்ப உறுப்பினர்களிடையே குற்றவுணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தன் எண்ணத்தை எளிதாய் நிறைவேற்றும் ஆணாதிக்கப் பெண்கள் தங்களின் கடமைகளை, செய்யாமல் இருப்பதோடு அதற்காக உடல்நிலை, வயது என பல காரணங்களை உருவாக்கி தன் முகத்திரை கிழிபடாமல் பல ஆண்டுகளுக்கு கொண்டு செல்வார்கள்.
ஆணாதிக்கத்தால் பாதிக்கப்/இரையாக்கப்படுபவர்கள் யார் ?
குடும்ப உறுப்பினர்களே இவர்களின் முதல் இரைகள். இவர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் அன்பு, கடமை, மதக் கோட்பாடுகள் இவைகளால் இவர்களின் வலைக்குள் சிக்கவைக்கப்பட்டு தங்களின் தனித்தன்மை பற்றிய அறிவோ, எண்ணமோ இன்றி இவர்களின் முடிவுகளுக்கும், குறுக்கீடுகளுக்கும் பழக்கப் படுத்தப்படுகிறார்கள்.இவர்களின் திருமணத்திற்குப் பிறகு இவர்களின் இணையர்களையும், இதே வலைக்குள் சிக்க வைக்க சமூகம், மதம், இனம் சார்ந்த அத்தனை கோட்பாடுகளும் வீடுகளில் விவாதிக்கப்படும். இணையர்களாய் வருபவர்கள் பெண்களாய் இருந்தால் பெண்மீது சமூகம் கொண்டுள்ள பெண்ணுக்கு எதிரான அத்தனை அம்புகளும் ஓய்வில்லாமல் அந்தப்பெண் தன்னிலை இழந்து அடிமையாகும் வரை தொடுக்கப்படும்.
இப்படியாக தனித்தனி தொடக்கமும், முடிவும் கொண்ட ஒற்றை நிகழ்வுகளாய் ஒவ்வொரு நிகழ்வுகளும் புரிந்துகொள்ளப்பட்டாலும், ஆணாதிக்கச் சிலந்திவலை ஆணாதிக்கப் பெண்களின் பல ஆண்டுகளுக்கு அதிகாரம் மற்றும் பணத்தைக் கையாளும் உரிமைக்கான நெடும்பின்னல்.
இந்த நடத்தைமுறைகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுவது நம்பிக்கையின் வழியில் அல்ல, தேவையின் வழியில். அதிகாரமும் பணமும் கையிலிருக்கும் வரை குடும்பத்தின் மையமாக இருக்கலாம் என்ற புரிதல் இந்த திட்டங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. மதம், கலாச்சாரம், உறவு, குற்றவுணர்வு முதலியன கருவிகளாக தேர்வு செய்யப்படுகின்றன. எந்தக் கருவி எந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்ற கணக்கோடு இவை செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே இது நம்பிக்கையின் தொடர்ச்சியல்ல — இது அதிகாரத்தின் நெடுந்திட்டம்.
Leave a Reply